ஐதராபாத்துக்கு வேறு பெயரா?? பா.ஜ. க்கு வேறு பெயர் சூட்டுவோம்; ஒவைசி காட்டம்!!

ஐதராபாத்துக்கு வேறு பெயரை சூட்ட முடியாது என்றும் பாஜகவுக்கு வேறு பெயர் சூட்டப்படும் என்றும் அசாதுதீன் ஒவைசி பேசினார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது, ஐதராபாத் பெயர் மாற்றம் தொடர்பான விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்தார். உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பைசாபாத்தை அயோத்தி என்றும், அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தோம்.
அப்படியிருக்கையில் ஐதராபாத்தை ஏன் பாக்யநகர் என பெயர் மாற்றம் செய்ய முடியாது? என யோகி ஆதித்யநாத் கூறினார். அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி.‘அவர்கள் (பாஜக) ஐதராபாத்திற்கு வேறு பெயரை சூட்ட விரும்புகிறார்கள். அவர்கள் எல்லா இடங்களிலும் பெயர்களை மாற்ற விரும்புகிறார்கள். உங்களுக்குத் தான் வேறு பெயர் சூட்டப்படும், ஐதராபாத்துக்கு வேறு பெயரை சூட்ட முடியாது.
உ.பி.யின் முதல்வர் இங்கு வந்து ஐதராபாத் பெயரை மாற்றுவேன் என்கிறார். இதற்காக நீங்கள் ஒப்பந்தம் ஏதாவது போட்டிருக்கிறீர்களா?’ என ஒவைசி கூறினார்.