சுருக்கு மடி வலையை அனுமதிக்கக் கோரி 3000 மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம்

நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில், சுருக்குமடி வலையை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை கண்டித்து, 4000க்கும் மேற்பட்ட மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடந்த பல வருடங்களாக, சுருக்குமடி வலையை பயன்படுத்தி, மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால், சுருக்கு வலையை பயன்படுத்துவதால் மீன்வளம் அழியும் அபாயம் என்று கூறி மத்திய அரசு திடீரென தடை செய்தது. இதனால், மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சுருக்குமடி வலையை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் மத்திய அரசு போட்ட உத்தரவால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள், கருப்பு கொடியை ஏந்தி அந்தந்த கிராமங்களில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“நாகப்பட்டினம் மாவட்டத்தில் தவிர சில மாவட்டங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதித்துள்ளனர். அதுபோலவே, எங்களுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். எங்களது போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் அனைத்து கிராம மீனவர்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம்.” என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருமுல்லைவாசல் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வனிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்தந்த கடை வாயிலில் கருப்பு கொடியையும் கட்டியுள்ளனர்.