“அரசு வாக்குறுதிகளை மட்டுமே வழங்குகிறது. அதை நிறைவேற்ற தவறுகிறது” – அன்னா ஹசாரே

விவசாயிகள் போராட்டத்திற்கு அதரவு தெரிவிக்கும் வகையில், சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
மத்திய அரசு செப்டம்பரில் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தால் கார்பரேட்டுகள் ஆதிக்கம் அதிகரிக்கும், குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானாவில் இப்போராட்டம் வலுத்தது. தற்போது வேளாண் சட்டத்தை திரும்பபெறும் வரை நகர மாட்டோம் என டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரேவும் களமிறங்கியுள்ளார். இவர் லோக்பால் சட்டம் கொண்டு வர காரணமானவர். இன்று தனது சொந்த கிராமமான மகாராஷ்டிரா மாநிலம் ராலேகான் சித்தியில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.விவசாயிகள் போராட்டம் குறித்து அவர் பேசியதாவது:-
டெல்லியில் நடந்து வரும் போராட்டம் நாடு முழுவதும் பரவ வேண்டும் என நான் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அரசாங்கத்திற்கு அழுத்தம் தர விவசாயிகள் வீதிகளுக்கு வர வேண்டும். ஆனால் யாரும் வன்முறையில் இறங்கக் கூடாது. விவசாயிகள் தங்கள் பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதற்கு இதுவே சரியான தருணம். நான் முன்னரே எனது ஆதரவை தெரிவித்தேன். மேலும் தொடர்ந்து ஆதரவளிப்பேன்.
விவசாய விளைபொருட்களுக்கான ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். அரசு வாக்குறுதிகளை மட்டுமே வழங்குகிறது. அதை நிறைவேற்ற தவறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.