டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை, இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சௌதாம்படனில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 4-வது நாள் ஆட்டநேர முடிவில், 599 டெஸ்ட் விக்கெட்டுகளை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் நேற்று, கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மழை காரணமாக நீண்ட நேரத்துக்குப் பிறகே, போட்டி தொடங்கியது. இந்நிலையில், 31 ரன்கள் எடுத்திருந்த பாகிஸ்தான் வீரர் அசார் அலியை ஆண்டர்சன் வீழ்த்தினார். இதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை, அவர் படைத்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோருக்கு அடுத்தபடியாக, 4-வது இடத்தில் ஆண்டர்சன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.