“ரேஷன் பொருள் வாங்கும் மக்களிடம் எங்களுக்கு விளம்பரம் செய்யுங்க… ” மத்திய அமைச்சரின் விநோத கோரிக்கை

ரேஷன் உணவுப் பொருள்களுக்கு மத்திய அரசே பணத்தை செலவிடும் நிலையில், அதை மறைத்து மாநில அரசுகள் மக்களிடம் நல்ல பெயர் வாங்கி வருவதாக மத்திய உணவு விநியோகத் துறை அமைச்சா் அமைச்சர் பாஸ்வான் புலம்பி தள்ளியுள்ளார்.
இதுகுறித்து காணொலி வழியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது:
“உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு சலுகை விலையில் மாநிலங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குகிறது. இந்த உணவுப் பொருள்கள், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் மக்களுக்கு மாநில அரசுகள் வழங்குகின்றன. ஒரு கிலோ அரிசி ரூ.2-க்கும், ஒரு கிலோ கோதுமை ரூ.3-க்கும் மக்களுக்கு வழங்க வேண்டும். இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி செலவாகிறது.
ஆனால், 11 மாநிலங்கள், மத்திய அரசிடம் உணவுப் பொருள்களைப் பெற்று, அவற்றை மக்களுக்கு மேலும் குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ விநியோகித்து வருகின்றன.
பொதுவிநியோகத் திட்டத்துக்கான உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்வதில், 90 சதவீத செலவை மத்திய அரசு ஏற்கிறது. இதுதொடா்பான விளம்பரங்களில் கூட மத்திய அரசின் பெயா் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால், அந்த மாநிலங்கள் தங்கள் சொந்த செலவிலேயே உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்குவதாக பெருமையுடன் கூறி வருகின்றன. குறிப்பாக, பெரும்பாலும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகள்தான், மத்திய அரசின் முயற்சிகளை சிறுமைப்படுத்த முயற்சிக்கின்றன.
இந்த உணவுப்பொருள்கள், மத்திய அரசிடம் இருந்து வருகின்றன என்பதை பயனாளிகளிடம் மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றாா் அவா்.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், கா்நாடகம் ஆகிய 4 மாநிலங்கள் இலவசமாக உணவுப்பொருள்களை வழங்குகின்றன. ஆந்திரம், தெலங்கானா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, திரிபுரா ஆகிய 6 மாநிலங்கள் மேலும் விலையைக் குறைத்து உணவுப்பொருள்களை மக்களுக்கு விநியோகிக்கின்றன. இந்நிலையில், விளம்பரம் குறித்து அதீத ஆர்வத்தை வெளிப்படுத்தும் அமைச்சரின் பேச்சை, நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.