ஆட்டோவுக்கு வாடகை கட்ட முடியாதவர் பயணியின் ரூ.1.4 லட்சத்தை திருப்பி அளித்தார்!

ஐதராபாத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவுக்கான தினசரி வாடகை கூட கட்ட முடியாத நிலையிலும், ஆட்டோவில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.1.4 லட்சத்தை திருப்பி அளித்துள்ளார்.
ஐதராபாத்தில் ஹசன் நகரைச் சேர்ந்தவர் முகமது ஹபீப். ரூ.250 தினசரி வாடகை செலுத்தி ஆட்டோ ஓட்டி வருகிறார். கொரோனா சூழலால் தினமும் 300 ரூபாயை வீட்டிற்கு எடுத்துச் செல்வதே சிரமமாக இருப்பதாக கூறுகிறார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இவர் ஆட்டோவில் பயணித்த பெண்மணி ஒருவர் கைப்பையை தவறவிட்டு சென்றுள்ளார். அதனை திறந்து கூட பார்க்காமல் அப்படியே அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அங்கு புகாரளிக்க வந்த பெண்ணிடம் கைப்பை திருப்பி அளிக்கப்பட்டது.
அதனை திறந்து பார்த்து ரூ.1.4 லட்சம் பணக்கட்டுகள் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். மேலும் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் முகமது ஹபீபிற்கு ரூ.5 ஆயிரம் வெகுமதியாக அளித்துள்ளார். இச்சம்பவத்தால் ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.