சீனா தடையில் சிக்கிய 28 அமெரிக்க எம்.பி.,க்கள்

அமெரிக்கா– சீனா இடையிலான உறவு, டிரம்ப் பதவிக்காலத்தில் மோசமான நிலையை அடைந்தது. அதில் பாதிக்கப்பட்ட சீனா, தன் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்ததாக கூறி, அமெரிக்க எம்.பி.,க்கள் 28 பேருக்கு தடை விதித்துள்ளது.
இதில், டிரம்ப் அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த மைக் பாம்பியோ, டிரம்ப் ஆலோசகர்கள் ஜான் பால்டன், ராபர்ட் ஓ பிரையன் ஆகியோரும் அடக்கம்.
இவ்வாறு தடை விதிக்கப்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தினரும், சீனாவுக்கோ, அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங், மெக்காவ் பிரதேசங்களுக்கோ செல்ல முடியாது. அவர்களுடன் தொடர்பில் இருக்கும் நபர்கள், நிறுவனங்கள், சீனாவுடன் எந்த வர்த்தகமும் செய்ய முடியாது.
டிரம்ப் அரசு, பதவி விலகும் இறுதி கட்டத்தில், சீனா, உய்குர் இஸ்லாமியர்களை படுகொலை செய்வதாக குற்றம் சாட்டும் வகையில் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.