சசிகலாவுக்கு கொரோனா..

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை கடந்த 2020-ம் ஆண்டு செலுத்தினார். தண்டனை காலம் முடிவடைவதையொட்டி சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் கடிதம் அனுப்பி இருப்பதாக அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்தார்
இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை, அவருக்கு காய்ச்சலுடன் மூச்சுத்திணறலும் அதிகமானதால், உயர் சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சசிகலா மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் இருந்து, விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.