காவல் உதவி ஆய்வாளர் கொலை ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே, ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏரல் பகுதியில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த முருகவேல் என்பவரை, ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு கண்டித்து, முருகவேலின் மினி லாரியை பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளார்.
காவல் நிலையத்துக்கு, மது போதையுடன் சென்ற முருகவேல், மினி லாரியை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், மாலை, காவல் நிலையம் வரச்சொல்லி அனுப்பியுள்ளார்.
நேற்று மாலை, காவல் நிலையம் சென்ற முருகவேலை, உதவி ஆய்வாளர் பாலு சத்தம் போட்டு அனுப்பியுள்ளார். வாகனத்தை தர மறுத்ததால், உதவி ஆய்வாளர் பாலுவிடம் தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு, ஏரல் பகுதியில் பொதுமக்களிடம், முருகவேல், தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்ததை அறிந்து, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட, உதவி ஆய்வாளர் பாலு, முருகவேலை கண்டித்து, அங்கிருந்து விரட்டியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த முருகவேல், நண்பர் ஒருவரின் மினி லாரியை எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த உதவி ஆய்வாளர் பாலு மீது மோதி விட்டு தப்பினார். இதில், சம்பவ இடத்திலேயே பாலு பலியானார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.