ராமர் கோயிலுக்கு, 2000 அடி ஆழத்தில் தாமிர செப்பேடு வைக்கப்படும்… எதற்காக?!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காண அடிக்கல் பூமி பூஜையின்போது 2000 அடிக்கும் கீழே கோயில் வரலாறு குறித்த அனைத்து விவரங்களும் வைக்கப்படும் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா உறுப்பினர் காமேஷ்வர் சவ்பால் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் கோயில் குறித்த எந்த சர்ச்சைகளும் எழக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மோடியுடன் பாஜக மூத்த தலைவர் அத்வானியும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
இந்த நிலையில் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ராவில் இடம் பெற்று இருக்கும் ஒரே தலித் உறுப்பினரான காமேஷ்வர் சவ்பால் அளித்திருக்கும் பேட்டியில், “நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் ராமர் கோயில் மீட்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எந்த சிக்கல்களும் வரக் கூடாது என்பதற்காக, அடிக்கல் நாட்டும்போது 2000 அடிக்குக் கீழே கோயில் வரலாறு குறித்த தகவல்கள் வைக்கப்படும். அப்போதுதான் எதிர்காலத்தில் எழும் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கும்.
நாட்டின் பல்வேறு திருத்தலங்களில் இருந்து மணல் கொண்டு வரப்படும். நாட்டின் பல்வேறு முக்கிய ஆறுகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு பூமி பூஜையின்போது அபிஷேகம் செய்யப்படும். குறிப்பாக ராமர் எந்தெந்த தீர்த்த தலங்களுக்கு சென்று இருந்தாரோ அங்கிருந்து புனித நீர் கொண்டு வரப்படும். எங்களுடைய தன்னார்வலர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் ” என்று தெரிவித்துள்ளார்.