“சக்கா ஜாம்” ; வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நாடு முழுவதிலும் 6ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம்..

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை வரும் 6ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். சக்கா ஜாம் என்று இப்போராட்டத்திற்கு பெயரிட்டுள்ள விவசாயிகள் மூன்று மணி நேரம் சாலைகளில் உள்ள தலைநகரை இணைக்கும் அனைத்தும் சாலைகளிலும் போக்குவரத்தை முடக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் 70வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்தும் சலோ சங்கங்களின் கூட்டமைப்பு இவ்வாறு முடிவு செய்துள்ளது.
இதனிடையே டெல்லி காசிப்பூர், சிங்கு, திக்ரி எல்லைகளை மூடி தடுப்புகளை அமைத்துள்ள போலீசார் டிராக்டர், பேருந்து, ஜீப் போன்ற வாகனங்களில் விவசாயிகளை தலைநகரை நோக்கி வருவதை தடுக்கும் வகையில் சாலைகளில் முள்கம்பிகளையும், கூர்மையான ஆணிகளையும் பதித்துள்ளனர். இதுகுறித்து பேசிய விவசாய சங்க நிர்வாகிகள், மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு உரிய ஒதுக்கீடு செய்யவில்லை என்று குற்றம்சாட்டினர். இதுகுறித்து சுவராஜ் இந்தியா அமைப்பு யோகேந்திர யாதவ் தெரிவித்ததாவது, பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
மத்திய அரசின் விவசாயிகள் விரோத போக்கு விரைவில் முடிவுக்கு வரும் என குறிப்பிட்டார். இதனிடையே டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காசிப்பூர் எல்லையில் போலீஸ் தடுப்புகள் அருகே சாலைகளில் இரும்பு ஊசிகளை போலீசார் நட்டு வைத்துள்ளனர். பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகயாத் வேண்டுகோளை ஏற்று காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் குவிந்து வருகின்றனர். இவர்களை தடுக்கவே போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது புகராகும்.
டெல்லி எல்லைகளாக சிங்கு, காசிப்பூர், தித்ரி மற்றும் ஹரியானாவில் உள்ள சில மாவட்டங்களில் சமூக வலைத்தள சேவைகள் நேற்று முடக்கப்பட்டன. சட்டவிரோதமாக யாரையும் போலீஸ் அடைத்துவைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.