ஈரான் சாபஹார் ஒப்பந்த ரத்து; இந்தியாவுக்கு பின்னடைவு!

இந்தியாவுடன் ஈரான் கையெழுத்திட்டிருந்த வரலாற்று சிறப்பு மிக்க, சாபஹார் ரயில்வே திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக, ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகம், இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு நெருக்கமாக உள்ளது. குஜராத்தின் காண்ட்லா மற்றும் ஈரானின் சாபஹார் துறைமுகங்களின் துாரம், டில்லி – மும்பை துாரத்தை விடவும் குறைவானது. இந்த துறைமுகம் மேம்படுத்தப்பட்டால், பாகிஸ்தான் உதவியில்லாமல், ஈரான் மற்றும் ஆப்கனுக்கு எளிதாக செல்ல முடியும்.
இந்த சபாஹர் துறைமுக திட்டத்தின் ஒரு அங்கம்தான் ஆப்கானிஸ்தான் பகுதிகள் வரையிலான ரயில் திட்டம். ஈரானின் முக்கிய துறைமுகமான சபஹாரில் இருந்து, ஆப்கானிஸ்தான் எல்லை வரை இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த 2016இல், இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. ஆனால் அமெரிக்காவுடனான நெருக்கத்தினால், இந்தியா இந்த திட்டத்தை காலம் தாழ்த்திக்கொண்டே இருந்தது.
இந்நிலையில், இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஈரான் அறிவித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக, திட்டத்தை துவங்க, இந்தியா எந்த பணிகளையும் செய்யவில்லை என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவுடன் 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஒப்பந்தங்களை ஈரான் கையெழுத்திட்டுள்ளது.
இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில், சபாஹர் துறைமுக ரயில் திட்டத்தில் இருந்து ஈரான் விலகுவதாக அறிவித்துள்ளது, இந்தியாவுக்கு மிகப் பெரும் இழப்பு என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், “இந்திய வெளியுறவுக் கொள்கையில் மிகப் பெரிய பின்னடைவு இது. மேலும் மிகப் பெரிய இழப்பு. அதேநேரத்தில் சீனா தனக்கு கிடைத்த நன்றாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. இவ்வளவு நடந்தும், மத்திய அரசை நாம் எந்த கேள்வியும் கேட்க முடியாது என்பதுதான் துரதிருஷ்டம். ” என்று தெரிவித்துள்ளார்.