தமிழகத்தில் பத்தில் மூன்று பேர் கொரோனாவால் பாதிப்பு..? திடுக்கிடும் உண்மை

தமிழகத்தில் பத்து பேரில் மூன்று பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக செரோலாஜிக்கல் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் பொது சுகாதார இயக்குநரகம் ஒரு செரோலாஜிக்கல் ஆய்வை மேற்கொண்டது. செரோலாஜிக்கல் என்பது ரத்தத்தில் உள்ள சீரம் அல்லது ரத்தத்தின் பிளாஸ்மா கூறுகளில் உள்ள சார்ஸ் கோவ்-2 (SARS-CoV-2) ஆன்டிபாடிகளைக் கண்டறியும் ஒரு நொதி அடிப்படையிலான சோதனை ஆகும்.
இந்த ஆய்வில் கடந்த நவம்பர் மாத நிலவரப்படி தமிழகத்தில் 2.3 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது, தமிழக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பாதிப்பு எண்ணிக்கையை விட 36 மடங்கு அதிகமாகும்.
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் தமிழகத்தில் சராசரியாக 31.5 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, நவம்பர் மாத நிலவரப்படி தமிழகத்தில் 10ல் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக பெரம்பலூரில் 51.05 சதவீதமும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 11.1 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 40.9%, கோவையில் 20.4%, திருச்சியில் 32%, மதுரையில் 38% பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவினாயகம் கூறுகையில், ‘கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட பலருக்கு தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவே தெரியவில்லை. பலருக்கும் முற்றிலும் அறிகுறிகள் அற்ற வகையில் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கும். நவ., மாத நிலவரப்படி, அதிகாரப்பூர்வ தகவலின்படி இறப்பு விகிதம் 1.5 சதவீதமாக இருந்தாலும், ஆய்வு முடிவின்படி, 0.052 சதவீதமாக இருந்துள்ளது,’ என்றார்.