விஜயகாந்தின் அறிவிப்பு.. தே.மு.தி.க க்கு ஏற்படுத்திய கொதிப்பு..

வரும் சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தன் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.,வுக்கு, 10 தொகுதிகள் வழங்க முன்வந்துள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கு விருப்ப மனு பெறும் அறிவிப்பை, தே.மு.தி.க., வெளியிட்டுள்ளதால், அக்கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற, தே.மு.தி.க., தலைமை முடிவு செய்துள்ளது. ஆனால், கூட்டணி பேச்சை, ஆளும் தலைமை, இன்னும் துவங்கவில்லை. இதனால், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர், அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையே, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேச்சை, விரைவில் துவங்க உள்ளதாக, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இது, தே.மு.தி.க.,வினருக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. தே.மு.தி.க.,விற்கு, 10 முதல், 15 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என, தெரிகிறது. இந்த தொகுதிகளில், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை நிறுத்த, தே.மு.தி.க., தலைமை கவனம் செலுத்தும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 234 தொகுதிகளில் போட்டியிட, கட்சியினர் விருப்ப மனு அளிக்கலாம் என்ற அறிவிப்பை, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுஉள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:சட்டசபை தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், விருப்ப மனுக்களை, சென்னை, கோயம்பேடில் உள்ள தலைமை அலுவலகத்தில், வரும், 25 முதல், மார்ச், 5ம் தேதி வரை பெறலாம். காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை, விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து, தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மனு அளிப்பவர்கள், நிர்வாகிகளாகவும், அடிப்படை உறுப்பினராகவும் இருக்க வேண்டும். தமிழக பொது தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள், 15 ஆயிரம் ரூபாயும், தனித் தொகுதிக்கு, 10 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரி பொது தொகுதிக்கு, 10 ஆயிரம் ரூபாயும், தனித் தொகுதிக்கு, 5,000 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு, விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்த் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு, அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. ‘தலைமை, இன்னும் பழைய நினைப்பில் இருக்கிறது. அது கி.மு., காலம்; நாம் இருப்பது, கி.பி., காலம்’ என, வலைதளங்களில் சொந்த கட்சியினரே கிண்டலடிக்கின்றனர். ‘தமிழகத்தில், 10 அல்லது 15 தொகுதிகளில் தான் போட்டியிட போகிறோம்; அப்படி இருக்கையில், எதற்காக, 234 தொகுதிகளுக்கு பணம் வசூலிக்க வேண்டும்?
புதுச்சேரியில் போட்டியிடவே போவதில்லை; அங்கு எதற்கு விருப்ப மனு?’ என, குமுறுகின்றனர்.