தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் 350 கோடி முறைகேடு.. லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை!!!

தமிழக காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தமிழக அரசின் 2017-18 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் காவல்துறையை நவீனமயமாக்க 47 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி மூலம் தமிழக காவல்துறைக்கு 10 ஆயிரம் வாக்கி-டாக்கி உள்ளிட்ட கருவிகள் வாங்குவதற்கு தொழில்நுட்ப பிரிவு முடிவு செய்தது.
ஆனால் 83 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், 10 ஆயிரம் வாக்கி டாக்கிகளுக்கு பதில் 4 ஆயிரம் கருவிகள் மட்டுமே வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், காவல்துறையில் தொழில்நுட்பக் கருவிகள் வாங்கியதில் 350 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு பரிந்துரைத்தது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம், காவல் அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள், 2 தனியார் நிறுவனங்கள் மீது கடந்த பிப்ரவரி 7-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றும், அதன் தொடர்ச்சியாக 18 இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் முறைகேடு தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று தொடங்கி உள்ளனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.