குமரியில் கல் குவாரி உரிமம் வழங்கியதில் முறைகேடு; சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

குமரி மாவட்டத்தில் கல் குவாரி உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கல்குளம் தாலுகாவில் கப்பியறையில் கருணைமாதா மலை என்ற குருசுமலை உள்ளது. இந்த மலையை சுற்றி பல கிராமங்கள், கண்மாய்கள் உள்ளன. இந்த மலையில் கல் குவாரி நடத்த 2016-ல் சிலருக்கு உரிமம் வழங்கப்பட்டது.

கல் குவாரிக்கு உரிமம் வழங்குவதாக இருந்தால் அந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தூரத்திற்கு குடியிருப்புகள், கோவில்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், நீர் நிலைகள் இருக்கக்கூடாது என்பது விதியாகும். இந் விதியை மீறி சிலருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

கல் குவாரி உரிமம் பெறுவதற்காக குவாரிக்கு உரிமம் வழங்கிய பகுதியில் குடியிருப்புகள், நீர் நிலைகள் இருப்பதை மறைத்து மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கல் குவாரியை மூடவில்லை.

எனவே, கல்குளம் பகுதியில் இயங்கி வரும் சட்டவிரோத கல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும், குவாரி உரிமம் பெற தவறான அறிக்கை அளித்த அதிகாரிகள் மீதும், போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்த கருங்கல் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், அனுமதியில்லாமல் இயங்கிய கல் குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி கல் மற்றும் கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குவாரிக்கு அனுமதி வழங்கிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குவாரியால் சேதமடைந்த மலைப்பகுதியை பழைய நிலைக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், குவாரி உரிமம் வழங்குவதில் முறைகேடுகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்குழு தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x