பால் வியாபாரி மகளை குத்திகொன்ற காதலன் – பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரம்!

கோவை அருகே, காதலிக்க மறுத்த பால் வியாபாரியின் மகளை, வீடு புகுந்து கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். பால் வியாபாரியான இவருக்கு, கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரித்தீஷ் (வயது 24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஊரடங்கு முன்பு வரை காதல் பறவைகளாக சுற்றித்திரிந்த இவர்கள், லாக்டவுனால் வீட்டிலேயே முடங்கிவிட்டனர். செல்போனில் இருவரும் பேசி வந்த நிலையில், இந்த விவகாரத்தை மாணவியின் தந்தை மோப்பம் பிடித்துவிட்டார்.
ஐஸ்வர்யாவை அவரது தந்தை சக்திவேல் கண்டிக்கவே, தனது காதலனுடன் பேசுவதை, ஐஸ்வர்யா நிறுத்தி விட்டார். இதனால், கடந்த 3 மாதங்களாக, ரித்தீஷ் தவித்து வந்துள்ளான். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், நேரடியாக ஐஸ்வர்யாவின் வீட்டுக்கே சென்ற ரித்தீஷ், தன்னை மீண்டம் காதலிக்கும்படி கெஞ்சியுள்ளான்.
இதற்கு, ஐஸ்வர்யா பிடிவாதமாக மறுக்கவே, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, உயிருக்கு உயிராய் (?) காதலித்த ஐஸ்வர்யாவை சரமாரியாக குத்தினான் ரித்தீஷ். அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த தந்தையையும், கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து ரித்தீஷ் தப்பிவிட்டார். பின்னர் தந்தை, மகள் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இளம்பெண் ஐஸ்வர்யா உயிரிழந்தார். இதனிடையே தப்பியோடிய ரித்தீஷ் போலீசார் தேடி வருகின்றனர்.