விமான நிலையத்தில் வேலை..? தமிழக இளைஞர்களை குறிவைத்து நூதனமான மோசடி

தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில் நேர்முகத் தேர்வு எதுவும் இல்லாமல் வேலை தருவதாக கூறி, வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடி நடைபெறுவது தெரியவந்துள்ளது.
விமான நிலையத்தில் உடனடி வேலை ,50 ஆயிரம் வரை ஊதியம், 8ம் வகுப்பு முதல் பி.இ முடித்தவர்கள் வரை வேலை வாய்ப்பு என்கிற கவர்ச்சிகரமான விளம்பரம், வாட்ஸ் அப் குழுக்களிலும், நேரடியாக SMS ஆகவும் பகிரப்படுகிறது. இதைப்பார்த்து தொடர்பு கொண்டால், , நம்பிக்கை தரும் வகையில் பெண் ஒருவர் பேசுகிறார்.
‘அந்த உரையாடலின் முடிவில் உங்களது சான்றிதழ்களை எனது வாட்ஸ் எண்ணிற்கு உடனே அனுப்புங்கள். கல்வித் தகுதிக்கேற்ற வேலைக்கு தேர்வு செய்கிறோம்’ என்று கூறுகிறார். அந்த எண்ணிற்கு சான்றிதழ்களை அனுப்பியதும் HR டிபார்ட்மெண்டிலிருந்து பேசுவதாக கூறி வேறொரு நபர் தொடர்பு கொள்வார். சான்றிதழ்களை அனுப்பியவர்களின் தகுதிப்படி விமான நிலையத்தில் ஒரு வேலையைச் சொல்லி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவு தங்குமிட வசதி உள்ளிட்டவை உள்ளது. விமான நிலையத்தில் குறுகிய கால பயிற்சிக்குப் பின் பணி நிரந்தரம் செய்யப்படும்.
பயிற்சி காலத்தில் கணினி அடையாள அட்டைக்கு 5 ஆயிரம் செலவாகும். இதில் பாதியை விமான நிலைய ஆணைய குழுமம் ஏற்றுக்கொள்கிறது. மீதம் உள்ள 2500 ஒரு வங்கிக் கணக்கில் செலுத்த சொல்கிறார்கள். விமான நிலையத்தில் வேலை போனில் பேசியோரின் நம்பிக்கையான பேச்சு இவற்றில் கவரப்படும் இளைஞர்கள் சொன்ன வங்கிக் கணக்கில் சொன்ன தொகையை செலுத்தி விடுகிறார்கள்.
பணம் செலுத்தப்பட்ட ஓரிரு தினத்தில் இந்திய விமான நிலைய ஆணையக குழும (AAI) லெட்டர் பேடில், அப்பாயின்மென்ட் ஆர்டர் பதிவுத் தபாலில் வீட்டிற்கு வருகிறது.
அதில், குறிப்பிட்ட ஏர்போர்ட்டில் குறிப்பிட்ட பணிக்கு தேர்வாகியுள்ளதாகவும் 28 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட தொகை (₹:10, 000 ₹ 26, 000, ₹ 50, 00 என வேலைக்கு ஏற்ப) முன்பணம் செலுத்த வேண்டும். பயிற்சி முடிந்ததும் பணம் திரும்ப வழங்கப்படும் என்று சொல்வார்கள். பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விபரத்தை தருவார்கள். பணம் செலுத்தியதும் பணிக்கு தயாராக இருக்கவும் அறிவுறுத்துவார்கள். பணம் செலுத்தினாலே அல்லது சுதாரித்து கேள்விகள் எழுப்பினால் நம்முடையை எண்ணை பிளாக் செய்து விட்டு, அடுத்த ஆளை குறி வைக்க தொடங்கி விடுவார்கள்.
இதுகுறித்து விமானப் போக்குவரத்து குறித்த ஆராய்ச்சியாளர் உபயதுல்லாஹ் கூறுகையில் , “விமான நிலையத்தில் மட்டுமல்ல எந்த பொதுத்துறை நிறுவனத்திலும் தனி நபர்கள், தனியார் அமைப்புகளால் பணி நியமனம் செய்யப்படுவதில்லை. இது போன்ற மோசடி அடிக்கடி நடப்பதாகவும், புகார் தர பலரும் தயங்குகிறார்கள். இந்த தயக்கமே மோசடி கும்பலுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. தயங்காமல் காவல்துறை அல்லது விமான நிலைய அதிகாரிகளை அணுக வேண்டும்” என்கிறார்