ஒவ்வொரு முறையும் ரூ.30 லஞ்சம்!’ – ஸ்ட்ரெச்சரைத் தள்ளிய 6 வயதுச் சிறுவன்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில், வார்டு பாய் ஒவ்வொரு முறையும் லஞ்சம் கேட்டதால், தனது தாத்தா இருந்த ஸ்ட்ரெச்சரை, தானே தள்ளிச்சென்ற 6 வயது சிறுவனின் வீடியோ பார்ப்போரின் மனதை கலங்க வைக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தியோரியா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மாவட்ட மருத்துவமனை ஒன்றில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, தனது தாத்தாவை ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு அழைத்து செல்ல தனது தாயுடன் இணைந்து ஸ்ட்ரெச்சரை தள்ளிச் செல்கிறார். அதாவது, ஸ்ட்ரெச்சரை சிறுவனின் தாய் முன்னால் இருந்து இழுக்க, சிறுவன் பின்னால் இருந்து தள்ளிச் செல்கிறார்.
இதைப்பற்றி அந்த தாய் கூறுகையில், “வார்டில் உள்ள ஊழியர் ஒவ்வொரு முறையும் ஸ்ட்ரெச்சரை இழுத்து செல்வதற்காக ரூபாய் 30 கேட்கிறார். நான் பணம் கொடுக்க மறுத்தபோது ஸ்ட்ரெச்சரை இழுத்துச் செல்ல மறுத்துவிட்டார. நாங்களே தள்ளிச்சென்றோம்.” என்று தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..