லஞ்சம் தர மறுத்ததால் முட்டை வண்டியை கவிழ்த்த அதிகாரிகள்!!!!!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி அதிகாரிகளால் முட்டை வியாபாரம் செய்த சிறுவனுக்கு நிகழ்ந்த கொடுமை இணையத்தில் வைரலாகியுள்ளது.
தொடர் ஊரடங்கினால் பெரிய மற்றும் சிறிய வணிகங்கள் என அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் சாலையோரத்தில் தள்ளுவண்டிக் கடையில் முட்டைகள் விற்றுக்கொண்டிருந்த 14 வயது சிறுவனிடம், அப்பகுதி மாநகராட்சி அதிகாரிகள் 100 ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த சிறுவன் இன்னும் வியாபாரம் ஆகாததால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளான். அப்போதும் விடாத அவர்கள், பணம் தரவில்லையெனில் நாளை இந்த இடத்தில் கடை நடத்த முடியாது எனக் கூறியுள்ளனர்.
கொரோனா ஊரடங்கில் வியாபாரம் குறைவாக தான் செல்கிறது அதிலும் பங்கு கேட்டால் என்ன செய்வது என அந்த சிறுவன் கேட்டதற்கு, கடுப்பான அதிகாரிகள் அவனின் வண்டியைக் கீழே கவிழ்த்து அனைத்து முட்டைகளையும் உடைத்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதில் வெள்ளை நிற உடையணிந்திருந்த பெயர் தெரியாத சிறுவன், அதிகாரிகளை நோக்கி ஏதோ வசை பாடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ சஞ்சய் குக்லா இந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.