இங்கிலீசில் பேசி அதிகாரிகளை ஓடவிட்ட காய்கறி விற்கும் பெண்…

பி.ஹெச்.டி பட்டம் படித்த பெண் ஒருவர் காய்கறி விற்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவை தடுக்கிறேன் என்ற பெயரில், இந்திய அரசு ஊரடங்கை நீட்டித்து கொண்டே செல்கிறது. ஆனால், மக்களின் வாழ்வாதாரத்துக்காக எந்த உதவியும் செய்வதாய் இல்லை. இதனால், பலரும் நடுத்தெருவுக்கு வரும் சூழல் உள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் முக்கியமான நகரான இந்தூரில் உள்ள சாலையோர காய்கறி வண்டிகளை, அதிகாரிகள் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, ரைசா அன்சாரி என்ற சாலையோர காய்கறி விற்கும் பெண், இங்கிலீசில் பேசி அதிகாரிகளை ஓட விட்டார்.
இதைப் பார்த்து கொண்டிருந்த பொதுமக்களுக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது. காய்கறி விற்கும் பெண்ணால், எப்படி இவ்வளவு சரளமாக இங்கிலீஷ் பேச முடிகிறது என்று பலரும் வியப்புடன் வாய்பிளந்தனர். விசாரித்ததில், ரைசா அன்சாரி என்ற அந்த இளம்பெண், தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில், எக்கனாமிக்சில் பி.எச்.டி டாக்டரேட் பட்டம் பெற்றவர் என்பது தெரியவந்தது.
அரசு அதிகாரிகள் குறித்து ரைசா அன்சாரி கூறியதாவது, “நாடு முழுவதும் சாலையோர பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். நான் எங்கள் குடும்பத்தின் சாப்பாட்டிற்காக இங்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்கிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி பிழைப்பார்கள்? என்னை போன்றவர்கள், எப்படி சம்பாதிப்பார்கள்? ஆனால், கொஞ்சமும் இரக்கம் இன்றி, இந்த அதிகாரிகள் எங்களை இங்கிருந்து செல்லுமாறு விரட்டுகிறார்கள்” என்றார்
பிஹெச்டி படித்த உங்களுக்கு வேறு வேலை இல்லையா என்று கேட்டதற்கு, “எனக்கு யார் வேலை கொடுப்பார்கள்? முஸ்லிம்களிடமிருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்படுகிறது என்ற கருத்து ஆரம்பத்தில் பரப்பிவிட்டார்கள். என் பெயர் ரெய்சா அன்சாரி என்பதால், எந்த கல்லூரியும் ஆராய்ச்சி நிறுவனமும் எனக்கு வேலை கொடுக்க தயாராக இல்லை,” என்று அவர் குற்றம்சாட்டினார்.