மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்கிற்கு கொரோனா தொற்று!

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 780 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த மத்திய பிரேதச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.
இது குறித்த தகவலை சிவராஜ் சிங் சவுகான் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். எனது மாநில மக்களிடம் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறிய கவனக்குறைவும் கொரோனா வைரஸை அழைத்து வந்துவிடும். வைரஸைத் தவிர்ப்பதற்கு நான் எல்லா முயற்சிகளையும் செய்தேன், ஆனால் பல்வேறு விஷயங்களுக்காக மக்கள் என்னைச் சந்தித்தனர்.

தற்போது மருத்துவர் வழிகாட்டுதல் படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கொரோனா வைரசுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்பட்டால், அது குணப்படுத்தக்கூடியது. பீதியடைய தேவையில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் அமைச்சர் அரவிந்த் சிங் பதோரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஏற்பாடு செய்த அமைச்சரவை கூட்டத்தில் புதன்கிழமை மற்ற அமைச்சர்களுடன் பங்கேற்றார். இதனால் அவருடன் தொடர்பிலிருந்த மற்ற அமைச்சர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.