கொரோனா தாக்கத்தால் ஜூலை ஜி.எஸ்.டி வசூல் ரூ.87,422 கோடியாக சரிவு!

கடந்த ஜூலை மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி தொகை ரூ.87,422 கோடி என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் வசூலான ரூ.87,422 கோடி ஜி.எஸ்.டியில் மத்திய ஜி.எஸ்.டி., ரூ.16,147 கோடி, மாநில ஜி.எஸ்.டி., 21,418 கோடி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., ரூ.42,592 கோடி ஆகும். கொரோனா தாக்கத்தால் ஜி.எஸ்.டி வசூல் குறைந்துக் கொண்டே வருகிறது. கடந்த ஜூன் மாதம் ரூ.90,917 கோடி ஜி.எஸ்.டி., வசூலானது. இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டில் ரூ.1.02 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது. தற்போது அதில் 14% இழப்பை சந்தித்துள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு மாதத்தை விட கடந்த மாத ஜி.எஸ்.டி வருவாய் அதிகம் இருப்பினும், கொரோனா காரணமாக வழங்கப்பட்ட நிவாரணத்தினால் வரி செலுத்துவோர் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் தொடர்பான வரிகளை கடந்த மாதம் செலுத்தியதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டக்கூடியவர்கள் செப்டம்பர் 2020 வரை வரி தாக்கல் செய்வதில் இருந்து தளர்வு பெற்றுள்ளதையும் கவனிக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.