“சாலையை காணவில்லை” பேனர் வைத்த பொதுமக்கள்; நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத் துறையினர்..

கோவை மேட்டுப்பாளைம் சாலையில், ஜி.என்.மில்ஸ் பகுதியில் இருந்து உருமாண்டம்பாளையம் சாலை செல்கிறது. இந்த சாலையில் ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அத்திக்கடவு குடிநீர் திட்டத்துக்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் மூலம் 5 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டது. குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னர், அந்த இடம் சரியாக மூடப்படவில்லை.
மேம்போக்காக குழியை மூடி மண் போடப்பட்டதால், சில நாட்களில் மண் இறங்கி மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. இதை சரி செய்ய நெடுஞ்சாலைத் துறையினர், குடிநீர் வடிகால் வாரியத்தினரிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மழைக் காலங்களில் குழியில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் சிரமத்துக்குள்ளாகினர்.
இதையடுத்து, கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்புச் சங்கத்தினர் சார்பில், குழி அருகே நேற்று முன்தினம் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. அதில்,‘சாலையை காணவில்லை. நெடுஞ்சாலையில் கிணறுகள், கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத் துறை’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மண்ணை போட்டு குழியை மூடினர். இதையடுத்து சில மணி நேரங்களுக்கு பிறகு அந்த பேனர் அகற்றப்பட்டது.