கடன் கொடுத்த பெண்ணை கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கொலை செய்த சாராய வியாபாரி!

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 வாரத்திற்கு முன் 50 வயது பெண்மணி ஒருவர் தேக்கு தோப்பில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். அவரது கொலையில் தற்போது துப்பு துலங்கியுள்ளது.
திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி நவநீதியம்மாள் (50). இவர் அதே ஊரைச் சேர்ந்த சிவகாமி (36) என்பவருக்கு அடிக்கடி பணம் கடனாக கொடுத்து வந்தார்.
கடந்த ஜூலை 28-ல் கொடுத்த கடனை வசூலிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதற்கு பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், திருத்தணி போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி மாலை மேட்டு காலனி அருகே தேக்கு தோப்பில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். திருத்தணி டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டனர். இறந்து கிடந்த பெண் மாயமான நவநீதியம்மாள் என தெரிந்தது. அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளும் மாயமாகியிருந்தன.

அவர் கடன் கொடுத்திருந்த சிவகாமி வீட்டிற்கு போலீசார் சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்தது. செல்போன் எண்களை கொண்டு ஆய்வு செய்ததில் அவர் ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டை அருகே இருப்பது தெரிந்தது. அங்கு சென்று அவரையும் அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர். கடன் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் கள்ளக்காதலன் சுரேஷ் (35) என்பவருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு தப்பியதாக கூறியுள்ளார்.
இவர் சில வாரங்களுக்கு முன்பு தான் கள்ளச்சாராயம் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.