“நீட் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த முடியாது” உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்!

வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த முடியுமா அல்லது வளைகுடா நாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியுமா என்று கேட்டு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதற்கு பதில் மனு அளித்துள்ள தேசிய தேர்வு முகமை, ”வெளிநாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியாது என்றும், மத்திய அரசு போதிய விமானங்களை இயக்கி வருவதால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது” என்று தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1, 14 மற்றும் மே 15ம் தேதிகளில் தேர்வு மையத்தை மாற்றவும், தேர்வு எழுதும் நகரங்களை மாற்றவும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதல் அறிவிப்பின் படி நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெறுவதாக இருந்ததாகவும், ஆனால் கொரோனா காரணமாக தேதி மாற்றப்பட்டதாகவும், தேர்வுக்குத் தயாராக மாணவர்களுக்கு போதிய அவகாசம் கொடுத்து அறிவிப்புகள் வெளியிட்டுள்ளதால் தேர்வை ஒத்திவைக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு என்பது பல்வேறு விதமான வினாக்கள் கொண்ட தேர்வு என்றும், இந்த தேர்வில் அனைத்து மாணவர்களுக்கும் சமநிலை கடைபிடிக்க வேண்டும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் நீட் தேர்வு நடத்தப்படும் வேண்டும் என்பதால் ஆன்லைன் மூலம் நீட் தேர்வு நடத்த சாத்தியமில்லை எனக் கூறிய தேசிய தேர்வு முகமை, மாணவர்களின் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு பதில் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.