கள்ளக்காதலனுக்கு ரூ.10 லட்சம் தந்து கணவனை தீர்த்துக்கட்ட முயன்ற மனைவி!

நாகர்கோவிலைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண் வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து கள்ளக்காதலனுக்கு ரூ.10 லட்சம் தந்து தனது கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு கைதாகியுள்ளார்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (31). இவருக்கு கணேஷ் (35) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதியினருக்கு 5 வயதில் மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் கணேஷின் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் கணேஷை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதை கண்ட காயத்ரி அலறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கணேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் அவர் நினைவு திரும்பியது.
போலீசார் அவரது மனைவி மீது சந்தேகமடைந்து விசாரித்தனர். செல்போன் பதிவுகளை ஆராய்ந்தனர். அதில், காயத்ரி செட்டி குளத்தில் மழலையர் பள்ளி நடத்தும் யாசின் என்பவரிடம், பலமுறை பேசியது தெரிந்தது.
திருமணத்துக்கு முன்பே யாசினை காதலித்துள்ளார் காயத்ரி. வீட்டினர் கட்டாயப்படுத்தியதால் கணேஷை திருமணம் செய்துகொண்டுள்ளார். பின்னர் யாசினின் மழலையர் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து தனது காதலை கன்டினியூ செய்துள்ளார். யாசினின் தேவைக்காக தனது கணவர் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து ரூ.10 லட்சம் பெற்று தந்துள்ளார்.
அதனை யாசின் திருப்பி தரவில்லை. பத்திரத்தை கேட்டு கணேஷ் தனது மனைவிக்கு நெருக்கடி தந்துள்ளார். இதை யாசினிடம் காயத்ரி கூற, அவரது திட்டப்படி இரண்டு கூலிப்படையினரை ரூ.4 லட்சத்திற்கு நியமித்து கணேஷை தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிர் தப்பியிருக்கிறார். கள்ளக்காதலனுக்கு கணவரது பணம் ரூ.10 லட்சம் தந்ததும் இல்லாமல், அவரையே கூலிப்படை வைத்து கொல்ல முயன்ற மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.