துக்கம் விசாரிக்கப்போன புதுச்சேரி கல்வி அமைச்சர்.. திணறடித்து திருப்பி அனுப்பிய ஊர் மக்கள்!!

புதுச்சேரி மாநிலத்தின் கல்வி, வேளாண் மற்றும் மின்துறை அமைச்சராக காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த கமலக்கண்ணன் செயல்பட்டு வருகிறார். இவர் தனது சொந்த தொகுதியான திருநள்ளாறு மேலசுப்ராயபுரம் மாதாக்கோயில் தெரு பகுதியில் இறந்துபோன மரியதாஸ் என்பவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள சென்றார். அங்கு அமைச்சர் கமலகண்ணனை அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சூழ்ந்துகொண்டு உள்ளே விடாமல் திருப்பி அனுப்பினர்.
“பதவிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் எங்கப் பகுதிக்கு என்ன செய்தீர்கள்? “என்று கேள்வி எழுப்பி கமலகண்ணனை திணறடித்தனர் இளைஞர்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கமலக்கண்ணன் நிற்க, “கொரோனா நோய் தொற்று தீவிரமடைந்து பொதுமக்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்த சமயங்களில் எங்களை வந்து பார்த்து எந்தவித உதவியும் செய்யாமல்…, தற்போது தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ஊருக்குள் எதற்கு வந்தீர்கள்?” என கேள்விகள் எழுப்பினர்,
தொடர்ந்து, தங்கள் பகுதிகளில் மரணமடைபவர்களின் உடல்களை சுடுகாட்டுப் பகுதிகளில் அடக்கம் செய்ய செல்வதற்குகூட சரியான பாதை வசதியில்லை என்று பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தரவில்லை எனக்கூறியும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பவும் எதற்கும் பதில் அளிக்காத அமைச்சர் கமலக்கண்ணன் தனது வாகனத்தில் ஏறி திரும்பிச் சென்றார்.
இந்த நிலையில் அமைச்சர் கமலக்கண்ணனை கேள்வி கேட்ட இளைஞர்கள் ஐன்ஸ்டின் ராஜ், லெனின் ராஜ் மற்றும் இயேசு ராஜ் ஆகிய மூவர் மீதும் காவல்துறை, வழிமறித்து ஆபாசமாக திட்டுதல் 294, 341 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அமைச்சராக பொறுப்பேற்ற நாள்முதல் இன்றுவரை கமலக்கண்ணன் தனது தொகுதிக்கு எந்த ஒரு ஆக்கபூர்வமான செயல்களையும் செய்யவில்லை என்று கூறி காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கமலகண்ணனை பொது மக்களே திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.