முற்றிலும் முடங்கிப் போன கோயம்பேடு பேருந்து நிலையம்!! 161 நாள்களுக்குப் பிறகு இயங்கியது

பொதுமுடக்கத்தின் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம் 161 நாள்களுக்குப் பிறகு இயங்கியது
அலைமோதும் பயணிகள் கூட்டம், எப்போதும் ஆரவாரம் என காட்சியளித்த கோயம்பேடு பேருந்து நிலையம், வரலாறு காணாத வகையில் கடந்த 160 நாள்களாக முற்றிலுமாக முடங்கிப் போனது. பிழைப்புத் தேடி சென்னைக்கு வருவோருக்கு சுமாா் 18 ஆண்டுகளாக அடைக்கலமாகவும், தன்னைச் சுற்றி சிறிய கடைகள் அமைத்த அனைவருக்கும் வாழ்வளித்த கோயம்பேடு, 5 மாதங்களாக ஆள் அரவமின்றி காட்சியளித்தது.
ஜூன் மாதம் அளித்த தளா்விலும், சென்னையில் பேருந்து சேவை தொடங்கும் என ஏக்கத்திலிருந்த அனைவருக்கும் ஏமாற்றமாகவே அமைந்தது. பொது முடக்கத்தின்போது, ஆங்காங்கே அத்திபூத்தாற்போல ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் ஒரு சில பேருந்துகளையே காண முடிந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் சென்னையில் பேருந்துகள் வழக்கம்போல இயங்கத் தொடங்கியுள்ளன. இத்தனை நாள்களாக அடைக்கப்பட்டிருந்த கோயம்பேடு பேருந்து நிலைய வாயில்களும் திறந்தன. இது, அனைத்துத் தரப்பினரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், முதல் நாள் என்பதால் பேருந்துகளில் பெரிய அளவில் மக்கள் கூட்டம் இல்லை. ஆனாலும் பேருந்துகள் எண்ணிக்கையில் குறைவில்லை. இவை, போதிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்பட்டன. சுகாதாரத் துறை அறிவுறுத்தலுக்கிணங்க முகக் கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டனா். ஒலிப் பெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பயணிகள், போக்குவரத்து பணியாளா்களைத் தவிர பிறா், பேருந்து நிலையத்துக்குள் இருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. பயணிகளின் தேவைக்காக அம்மா குடிநீா் கடைகளும் திறக்கப்பட்டன. அதே நேரம், வெளி மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படாததால், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு உள்புறம், வெறுமையாகவே காட்சியளித்தது. விரைவில், வெளி மாவட்டப் பேருந்துகளும் இயக்கப்பட்டு, கோயம்பேடு பேருந்து நிலையம், பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.