“இட்லியின் பெருமை” கமலா ஹாரிஸ் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் வரவேற்பு
அமெரிக்காவில் வரும் நவ., 3ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அமெரிக்க கருப்பின மக்களின் ஆதரவைப் பெற, ஜனநாயகக் கட்சி, இந்திய மற்றும் ஜமைக்கா கருப்பின பூர்வீகத்தை கொண்ட, 55 வயதான கமலாதேவி ஹாரிசை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சியில் கமலா முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவர் தற்போது தனது சொந்த மாகாணமான கலிபோர்னியாவில் இருந்து பல அமெரிக்க மாகாணங்களுக்கு பேரணி நிகழ்ச்சி நடத்தி பொதுவெளிகளில் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில், தனது இந்தியப் பூர்வீகம் குறித்து பெருமையாகப் பேசிய கமலா, ‘சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவ நிபுணரான, தனது தாய் சியாமளாதேவி, தென்னிந்திய உணவுகள் மீது மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும், தனக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான இட்லியின் பெருமையைப் பற்றி அடிக்கடி கூறுவார் என்றும் தெரிவித்தார். இது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் வாக்கு தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்காற்றும் என்பதை மறுக்க இயலாது. இதனால் இந்தியப் பூர்வீகம் கொண்ட கமலா இவர்கள் வாக்குகளை கவர எளிதில் வழிவகை செய்வார்’ என, ஜனநாயக கட்சி கணித்துள்ளது. அது தற்போது சரியான பாதையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை கமலாவின் உரை உறுதிபடுத்தியுள்ளது.