பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டு ரூ.54 லட்சம் இழந்த பெண்

புதுச்சேரியை சேர்ந்த ஐ.டி., பெண் ஊழியர் ஒருவர் முன்பின் அறிமுகம் இல்லாத நபர் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்பியதாக கூறியதை நம்பி ரூ.54 லட்சம் சுங்க வரி என்ற பெயரில் இழந்துள்ளார். 

புதுச்சேரியைச் சேர்ந்தவர் சுனைனா நராங், (35). மென்பொறியாளர். சில மாதங்களுக்கு முன், இவருக்கு, ‘வாட்ஸ் ஆப்’ மூலமாக நண்பர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். வெளிநாட்டில் உயரிய வேலையில் இருப்பதாக கூறி சில நாட்கள் பழகி வந்த அவர், சுனைனாவின் நம்பிக்கையை பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் அனுப்பியிருப்பதாக கூறியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து சில நாட்களில் சுனைனாவுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. சுங்க அதிகாரி பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட அந்நபர், உங்கள் பெயருக்கு விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் வந்துள்ளது. அதனை பெற்றுக்கொள்ள ரூ.54 லட்சம் வரி கட்ட வேண்டும் என கூறியுள்ளார். 

இதனை நம்பிய அந்த மெத்த படித்த பெண்மணி, பல தவனையாக ரூ.54 லட்சம் அனுப்பியுள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும் எந்த பொருட்களும் வரவில்லை. வாட்ஸப்பில் அறிமுகமான நண்பர் மற்றும் சுங்க அதிகாரி என கூறிய நபர் இருவருக்கும் அழைத்துள்ளார். சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. 

அரை கோடியை இழந்திருக்கிறோம் என புரிந்ததும் ஆடிப்போய்விட்டார். உடனே புதுச்சேரி, சி.பி.சி.ஐ.டி., சைபர் கிரைம் பிரிவில், நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து, மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

இது போன்று மாதத்திற்கு ஒரு செய்தி வந்தாலும் படித்தவர்களே விழிப்புணர்வு இன்றி பணத்தை பறிகொடுத்து வருவது வாடிக்கையாவிட்டது. செய்தித்தாள்களை அனைவரும் தினமும் படித்தாலே பல மோசடி பேர்வழிகளிடமிருந்து தப்பிக்கலாம்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x