ரூ.13 கோடி நகை கொள்ளை சம்பவம்; முருகன், சு‍ரேஷ் மீது குற்றப்பத்திரிகை

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில், முக்கிய குற்றவாளிகளான முருகன் மற்றும் சுரேஷ் மீது காலதாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இது குறித்து விசாரித்த போலீசார், திருவாரூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகனின் சகோதரி கனகவல்லி, மணிகண்டன், மதுரையைச் சேர்ந்த கணேசன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான திருவாரூர் முருகன், கடந்தாண்டு அக்டோபர் 11-ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்திலும், முருகனின் மைத்துனர் சுரேஷ், செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இவர்களிடமிருந்து, 25 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டு, 162 நாட்கள் கடந்த நிலையிலும், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், அவருக்கு திருச்சி ஜே.எம்., 1 நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து, விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.

இந்நிலையில், அப்போதைய காவல் ஆய்வாளர் திரு. கோசலைராம் உட்பட 25 பேரை சாட்சிகளாக வைத்து, முருகன், சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது, குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தரும் வகையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x