கலைவாணர் அரங்கில், தற்காலிக சட்டசபை அமைக்க, 1.20 கோடி ரூபாய் செலவு

கலைவாணர் அரங்கில், தற்காலிக சட்டசபை அமைக்க, 1.20 கோடி ரூபாயை அரசு செலவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக, புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக, கலைவாணர் அரங்கில், சட்டசபை கூட்டம் நடத்த, இம்மாதம், 3ம் தேதி முடிவானது. இதையடுத்து, பொதுப்பணித்துறை வாயிலாக, கலைவாணர் அரங்கில், தற்காலிக சட்டசபை அமைக்கும் பணி துவங்கியது. தலைமை செயலகத்தில் உள்ளது போன்றே, 10 நாட்களில் தற்காலிக சட்டசபை அமைக்கப்பட்டது.
இங்கு, 14 முதல், 16ம் தேதி வரை, மூன்று நாட்கள் சட்டசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, பொதுப்பணி துறை வாயிலாக, 1.20 கோடி ரூபாயை, அரசு செலவழித்துள்ளது. இந்த நிதியில், மின்விளக்குகள், மின்விசிறி, பெயின்ட் அடித்தல், அறைகளை பிரித்து உருவாக்குதல், கழிவறைகளை மேம்படுத்துதல் போன்ற நிரந்தர பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
கடந்த, 2011 தி.மு.க., ஆட்சியில், கலைவாணர் அரங்கம் அருகே பிரமாண்டமாக புதிய சட்டசபை கட்டப்பட்டது. தற்போது, இது அரசு பன்னோக்கு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு சட்டசபை கூட்டம் நடத்திய போது, மேஜைகள், நாற்காலிகள், தலைவர்களின் படங்கள், ஒலிபெருக்கிகள், மைக்குகள் போன்றவை கொள்முதல் செய்யப்பட்டன.
மருத்துவமனையாக மாற்றப்பட்ட பின், அவற்றை பத்திரமாக பொதுப்பணி துறையினர் பாதுகாத்து வைத்திருந்தனர். தற்போது, அவற்றில் பெரும்பாலான பொருட்கள், முதல்வர் இ.பி.எஸ்., அனுமதியுடன், கலைவாணர் அரங்கில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
கேலரிகள் அமைப்பதற்கான தளவாடங்கள், கூடுதல் மைக் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டுமே, வாடகைக்கு பெறப்பட்டு உள்ளன. இதன்வாயிலாக, அரசிற்கு கூடுதல் செலவு தவிர்க்கப்பட்டு உள்ளது.