அங்கொட லொக்கா மரணம் – சி.பி.சி.ஐ.டி., விசாரணை

இலங்கை நிழல் உலக தாதாவான சர்வதேச குற்றவாளி அங்கொட லொக்காவின் உடல் முறைகேடாக எரிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் நிழல் உலக தாதாவும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவருமான அங்கொடா லொக்கா, தமிழகத்தில் பதுங்கி இருந்த நிலையில், கடந்த மாதம் 4-ம் தேதி, கோவை சேரன்மாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரது குடியுரிமையை மறைத்து, மேற்கு வங்களத்தை சேர்ந்த பிரதீப்சிங் என்ற பெயரில், மதுரை கூடல்நகர் அருகே ரயிலார் நகரில் வசிப்பதாக போலி ஆவணங்களை தயாரித்து, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லொக்காவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், போலி ஆவணம் தயாரித்ததாக மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் மற்றும் அங்கொடா லொக்காவுடன் இருந்த அம்மானிதான்ஷி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றபட்ட நிலையில், சி.பி.சி.ஐ.டி ஐஜி சங்கர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்கொடா லொக்கா உடல் உண்மையில் எரிக்கப்பட்டதா? அவர் உயிருடன் உள்ளாரா? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை முடிவில் தெரியவரும்.