ஆஸ்திரேலியரை சுட்டுக்கொன்ற சீனா! போதை கடத்தலுக்கு தண்டனை

போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக, ஆஸ்திரேலியரை சீனா சுட்டுக்கொன்றுள்ளது. இதற்கு ஆஸ்திரேலியா கவலை தெரிவித்துள்ளது. இச்சம்பவம், இருநாட்டு உறவுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர் கர்ம் கில்லெஸ்பி. இவர், கடந்த 2013இல், சீன நகரமான குவாங்சோவில் உள்ள விமான நிலையத்தில் வைத்து, 7.5 கிலோ மெதம்பெட்டமைன் எனப்படும் போதைப் பொருட்களுடன் கையும் களவுமாக பிடிபட்டார். இது விலையுயர்ந்த ஒரு போதை வஸ்துவாகும். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், குவாங்சோ இடைநிலை மக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு கில்லெஸ்பிக்கு சிறைத் தண்டனை விதித்ததுடன், அவரின் தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அதற்கான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்நாட்டு நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. சீனா நாட்டின் வழக்கப்படி, மரண தண்டனை என்பது, துப்பாக்கியால் சுட்டு நிறைவேற்றப்படும். அதன்படி, கர்ம் கில்லெஸ்பி என்கிற அந்த ஆஸ்திரேலியர், துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம், “கில்லெஸ்பிக்கு சீன நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கேட்டு நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். ஆஸ்திரேலியா மரண தண்டனைக்கு எதிரான நாடு. எல்லா மக்களுக்குமான மரண தண்டனையை ஆஸ்திரேலியா எதிர்த்துவருகிறது. மரணதண்டனையை உலகளவில் ஒழிப்பதை ஆஸ்திரேலிய ஆதரிக்கிறது. எனவே மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற எங்கள் இலக்கை அடைய, நாங்கள் அனைத்து வழிகளிலும் கடமையாற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளை விட போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்கு சீனா மரணதண்டனை வழங்கிவருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. சீன நீதிமன்றத்தின் இந்த முடிவால் அந்நாட்டுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பதற்றநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ஏற்கனவே கொரோனா விவகாரத்தில் சீனா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே பனிப்போர் உருவாகியுள்ளது. கொரோனா விவகாரத்தில் சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஆஸ்திரேலியா வலியுறுத்தியிருந்தது. மேலும் சீனாவுக்கு எதிரான தீர்மானத்தை உலக சுகாதார நிறுவன கூட்டத்திலும் முன்மொழிந்திருந்தது.
இந்த சூழலில், ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கருதப்படுகிறது. என்ன மக்களே, சீனா செய்தது சரியா? இது உள்நோக்கம் கொண்ட தீர்ப்பா அல்லது போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையா? இதை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பதிவிடவும்.