“ராமர் கோவில் குறித்த பிரியங்கா காந்தியின் அறிக்கையில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை” கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து!!!!

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி நேரில் சென்று அடிக்கல் நாட்டி வைத்து கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். இதனிடையே ராமர் அனைவருக்கும் பொதுவானவர் என்றும், அவரை புகழ்ந்தும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அவரது அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “பிரியங்கா காந்தியின் அறிக்கையில் தனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெரியும். மதச்சார்பின்மை பற்றிய தெளிவான கருத்து காங்கிரஸுக்கு இருந்திருந்தால், இந்தியாவில் இந்த நிலை வந்திருக்காது” என்றும குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் கூறுகையில், “ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவின் நிலைப்பாடு என்ன? அவர்களது செயல்களும் வரலாற்றின் ஒருபகுதியாக இருக்கிறது. காங்கிரஸ் மிதவாத இந்துத்துவாவை கடைபிடித்து வருகிறது. பாபர் மசூதியை இடிக்கும் போது, கண்ணை மூடிக்கொண்டு அலட்சியமாக இருந்தவர் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“நம் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த தொற்றில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்று அனைவரும் சிந்திக்க வேண்டும். கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியால் பலரும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில்தான் நாம் தற்போது கவனம் செலுத்த வேண்டும். மற்ற விஷயங்களை அதன்பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.