‘எம்.எல்.ஏ.க்களுக்கு 15 கோடி பேரம் பேசும் பா.ஜ.க.’ ராஜஸ்தான் முதல்வர் குற்றச்சாட்டு

ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியை கவிழச் செய்யும் முயற்சியில் பா.ஜ.க., தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, அம்மாநில முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில், முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மை காலமாக அங்கு அரசியல் குழப்பம் இருந்து வரும் நிலையில், ஜெய்ப்பூரில் காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு. அசோக் கெலாட், கொரோனா நெருக்கடி காலத்திலும், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சிகளில், பா.ஜ.க., தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 15 கோடி ரூபாய் தருவதாக பா.ஜ.க., குதிரைபேரம் பேசி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக, மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க., ஆட்சியை பிடித்துள்ளதாகவும், எதிர்வரும் தேர்தல்களில், பா.ஜ.க.,வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், கொரோனா காலத்திலும் கீழ்த்தரமான அரசியலில் பா.ஜ.க., ஈடுபட்டு வருகிறது என்றும் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் கூறினார்.
ஏன்ஐ