“தமிழக அரசு சார்பில் மேகதாது விவகாரம் குறித்து ஒரு கடிதம் கூட பிரதமருக்கு அனுப்பாதது ஏன்?” டி.ஆர்.பாலு கேள்வி!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், “மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்காக பிரதமரிடம் கர்நாடக முதலமைச்சர் அனுமதிக் கேட்கப் போகிறார் என்ற தகவல் அறிந்து, பிரதமரை சந்தித்து அனுமதி வழங்கக் கூடாது என கேட்கும்படி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டார்.
சட்டமன்றக் கூட்டத்தொடரின் போதும், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகனும் இது தொடர்பாக பிரதமரை சந்தித்து முறையிட முதலமைச்சருக்கு வலியுறுத்தினார். ஆனால், இதுவரையில், தமிழக அரசு சார்பில் முதலமைச்சரோ, துறை சார்ந்த அமைச்சரோ மேகதாது விவகாரம் தொடர்பாக கடிதம் கூட பிரதமருக்கு அனுப்பவில்லை.
இந்த நிலையில், நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி பிரதமர் மோடியை சந்தித்து மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதியளிக்கக் கூடாது என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதோடு, மு.க.ஸ்டாலினின் கடிதத்தையும் சமர்ப்பித்தோம். இதனையடுத்து, “மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு பாதகமாக எந்த முடிவும் எடுக்க மாட்டேன்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.