மாலியில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்: அதிபர், பிரதமர் கைது

மாலி நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டதையடுத்து அந்நாட்டு அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் மெய்கா பவ்வ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான, மாலி நாட்டின் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக, கடந்த ஒரு மாதமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், ராணுவத்தில் பணியாற்றி வந்தவர்கள் திடீரென கிளர்ச்சியாளர்களாக மாறினர்.

ஆயுதங்களுடன், தலைநகர் பமாகோவில் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி அவர்கள் சுட்டுக்கொண்டே சென்றதாக தெரிகிறது. மேலும், ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வந்தன. இதையடுத்து நாட்டில் ராணுவ புரட்சி வெடித்ததாக கூறப்படுகிறது. நிலைமை முற்றியதையடுத்து பிரதமர் பவ்பவ் சிஸ்சே ராணுவ உயரதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் பலனில்லை.

இந்நிலையில் அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு கட்டுப்பாட்டை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால், மாலியில் ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.