கொலை மிரட்டல் வருது: போலீசில் ‘பேஸ்புக்’ உயரதிகாரி புகார்

பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்கள் வருவதாக, பேஸ்புக் உயர் அதிகாரி ஒருவர் டெல்லி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
பா.ஜ.க., தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை, ‘பேஸ்புக்’ கண்டுகொள்வதில்லை என்று வெளிநாட்டு ஊடகம் வெளியிட்ட கட்டுரை ஒன்றை சுட்டிக்காட்டி பா.ஜ.க.,வை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, இந்தியாவில் ‘வாட்ஸ் அப், பேஸ்புக்’ ஆகியவற்றை, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்து விளக்கமளித்த பேஸ்புக் நிர்வாகம், யார் வெறுக்கத்தக்க வகையில் பேசினாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது கட்சி தொடர்பையோ பொருட்படுத்தாமல், பாரபட்சமற்ற தனது கொள்கைகளை பேஸ்புக் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், பேஸ்புக் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பொது கொள்கை இயக்குனர் அங்கி தாஸ், டெல்லி போலீசின் சைபர் பிரிவில் புகார் அளித்துள்ளார். அதில் தங்களுக்கு எதிராக கொலை மிரட்டல் அச்சுறுத்தல் வருவதாகவும், ஆபாச கருத்துக்களை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.