ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு பெயர் பரிந்துரை

விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு, பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசு தரப்பில், ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருது ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளுக்கு தகுதியான வீரர் – வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் பரிந்துரை செய்கின்றன.

அதன்படி, இந்தாண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு, பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோகித் சர்மா, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, துப்பாக்கி சுடும் வீராங்கனை அஞ்சும் மோட்ஜில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகியோரின் பெயர்களும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.