கேரள தங்கக் கடத்தல் விவகாரம்: காங்., கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

தங்கக் கடத்தல் விவகாரத்தால் கேரள சட்டப்பேரவையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, முதன்முறையாக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நேற்று கூடியது. பேரவைத் தொடங்கியதும், தங்கக் கடத்தல் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷன் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட சபாநாயகர், அதன் மீது விவாதம் நடத்த அனுமதி வழங்கினார்.

இதையடுத்து அவையில் காரசார விவாதம் நடைபெற்றது. தங்கக் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அரசு அதிகாரத்தை தங்கள் விருப்பப்படி பயன்படுத்தி உள்ளனர் என, பினராயி விஜயன் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். முதலமைச்சர் பினராயி விஜயனிடமும் விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
வேறு எந்த அலுவல்களும் மேற்கொள்ளாமல், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 10 மணி நேரத்திற்கு மேல் விவாதம் நடந்தது. பெரும் கூச்சல் குழப்பத்திற்கு பிறகு, சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக 87 எம்.எல்.ஏ.,க்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக 40 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.