தூய்மை நகரங்கள் பட்டியல் – முதல் பத்து இடங்களில் தமிழகம் இல்லை!

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற அமைச்சகம் இன்று (ஆக., 20) வெளியிட்டுள்ள நாட்டின் தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த நகரமும் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2016 முதல் ஆண்டுதோறும், நகரங்களில் தூய்மை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரவரிசை வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு தூய்மை ஆய்வு மொத்தம் 4242 நகரங்களில் 1.9 கோடி மக்களிடம் 28 நாட்களில் முழுக்க காகிதமற்ற முறையில் எடுக்கப்பட்டது. தூய்மை ஆய்வில் நகராட்சிகளின் திடக் கழிவு மேலாண்மை, வீட்டுக்கு வீடு சென்று குப்பைகளை சேகரித்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு, பொது மக்களின் கருத்து, நேரடி கண்காணிப்பு போன்ற அளவுகோல்கள் மூலம் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
இந்தாண்டு தரவரிசையில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் நான்காவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை குஜராத்தின் சூரத்தும், மூன்றாம் இடத்தை மஹாராஷ்டிராவின் நவி மும்பையும் பிடித்துள்ளன. இதில் முதல் பத்து இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த நகரமும் இடம்பெறவில்லை.
10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட 47 நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் கோவை 40-வது இடத்தையும், மதுரையும் சென்னையும் முறையே 42 மற்றும் 45-வது இடங்களையும் பிடித்துள்ளன. பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 382 நகரங்களில் திருச்சி 102, திருநெல்வேலி 159, சேலம் 173, திருப்பூர் 223-வது இடங்களை பிடித்துள்ளது.