“அருவருப்பான ஆர்.எஸ்.எஸ்..” – பா.ஜ., எம்.எல்.ஏ. கூறிய சர்ச்சை கருத்துக்கு கொதித்தெழுந்த ராகுல்

‘மகள்களுக்கு பெற்றோர்கள் நல்ல பண்புகள் மற்றும் கலாசாரத்தை சொல்லி தந்து வளர்த்தால் தான் பலாத்காரம் தடுக்கப்படும்’ என, பா.ஜ., – எம்.எல்.ஏ., கூறிய கருத்துக்கு ராகுல் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
உ.பி., மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன. செப்., 14ல் ஹத்ராஸ் மாவட்டத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், செப்., 29ல் உயிரிழந்தார். இந்நிலையில் உ.பி., மாநிலம் பல்யா தொகுதியின் பா.ஜ., – எம்.எல்.ஏ., சுரேந்திர சிங், ”பலாத்காரம் நடக்காமல் தடுக்க, பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும், நல்ல பண்புகளையும் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்,” என்றார். இவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்., எம்.பி., ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில், ‘அருவருப்பான ஆர்.எஸ்.எஸ்., ஆணாதிக்க மனநிலை இது. ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு நல்ல பண்புகள் கற்பிக்க வேண்டுமா?’ எனப் பதிவிட்டுள்ளார்.