செவிட்டு காதுகளில் அறிவுரைகள்: ப.சிதம்பரம் சாடல்

பிரதமரின் உரையில் ஊரடங்கைத் தவிர புதிய செய்தி ஒன்றுமில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார். எனினும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதித் தொகுப்பையும் அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், எந்த அறிவிப்பும் வெளிவராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊரடங்கை நீட்டிப்பதற்கான நிர்ப்பந்தத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அந்த முடிவையும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துக்களை மட்டும் மறுபரீசிலனை செய்கிறோம். பிரதமரின் புத்தாண்டு செய்தியில் புதிதாக ஒன்றுமில்லை. ஏழைகளின் வாழ்வாதாரம், அவர்கள் உயிர்வாழ வேண்டும் என்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்கவில்லை.
நிதி வேண்டும் என்று கேட்ட மாநில முதல்வர்களின் கோரிக்கைக்கு பதில் இல்லை. மார்ச் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிதித் தொகுப்பை விட கூடுதலாக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. ரகுராம் ராஜன் முதல் ஜீன் ட்ரீஸ் வரை, பிரபாத் பட்நாயக் முதல் அபிஜித் பானர்ஜி வரை அவர்களின் அறிவுரை, செவிட்டு காதுகளில் விழுந்துள்ளது. ஏற்கனவே 21 நாட்கள், தற்போது 19 நாட்கள் என ஏழைகள் உணவு உள்பட தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பணம் இருக்கிறது, உணவு இருக்கிறது, ஆனால் அரசாங்கம் எதையும் தராது” என்றும் விமர்சித்தார்.