இஸ்ரேல், யு.ஏ.இ., பஹ்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

இஸ்ரேலுடன் மத்திய கிழக்கின் இரண்டு முக்கியமான நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) மற்றும் பக்ரைன் ஆகியவை அமைதி ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்மூலம் இருதரப்புக்குமான உறவில் இயல்புநிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
பாலஸ்தீனை அபகரித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, ஜோர்டான், லெபனான், ஈராக் , சிரியா, மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட அனைத்து அரபு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் கடந்த 1979-ல் எகிப்தும், 1994-ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் திடீரென அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன.
அதன்பின்னர், பலவருடங்கள் கழித்து, தற்போது வளைகுடா நாடான ஐக்கிய அமீரகம் அமைதி ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு யு.ஏ.இ.

இன்று இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. வெள்ளை மாளிகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூ, யு.ஏ.இ. வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் ஜியாத் நெஹ்யான், பக்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல் லத்தீப் ஜியானி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்துக்கு பாலஸ்தீன நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் செய்த துரோகம் என்றும், இந்த இருநாடுகளும் முதுகில் குத்தியவர்கள் வரிசையில் இணைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.