இந்திய பொருளாதாரம் 24 ஆண்டுகளில் இல்லாத சரிவு…அவமானம் என ப.சிதம்பரம் விளாசல்

ஏற்கெனவே மோசமான பொருளாதார மந்தநிலையை நாடு எதிர்கொண்டு வரும் வேளையில், கொரோனா பாதிப்பு காரணமாக போடப்பட்ட ஊரடங்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முடக்கிப் போட்டு விட்டது.
2020-21 ஆண்டின் முதல் காலாண்டு ஜிடிபி தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ஜிடிபி 23.9% சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் நமது நாடு அதிகாரப்பூர்வமாக பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதற்கு முன்பு ஜி20 நாடுகளில் பிரிட்டன் தான் 21.7 சதவீதம் சரிவடைந்தது. ஆனால், பிரிட்டனைக் காட்டிலும் இந்தியாவின் ஜிடிபி 23.9 சதவீதமாக உள்ளது. ஜி20 நாடுகளில் தற்போது இந்தியா தான் ஜிடிபி வீழ்ச்சியடைந்து மோசமான பொருளாதார நிலையில் உள்ளது.
ஜிடிபி கிட்டத்தட்ட 24 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்திருப்பது, இந்திய சுதந்திர வரலாற்றிலேயே இல்லாத ஒன்று என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். துரதிருஷ்டவசமாக இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே தங்களுடைய எச்சரிக்கையை இந்திய அரசு உதாசீனப்படுத்தி வந்தது என்று தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரமும் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களைப் பற்றி சிந்திக்காத, அக்கறையற்ற அரசால் இந்த தேசம் மிகப் பெரிய விலையை கொடுத்து வருகிறது. இந்த அரசு தமது தவறுகளை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது. நாட்டின் நிதி அமைச்சரோ, பொருளாதார சரிவுக்கு கடவுள்தான் காரணம் என்கிறார். இத்தகைய பொருளாதார நிலையும் மோடி அரசுக்கு அவமானம் என காட்டமாக கூறியுள்ளார்.