தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனரை இந்தி தெரியாததால் அவமானப்படுத்திய விமானநிலைய அதிகாரிகள்!

டெல்லி விமான நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு இந்தி தெரியாததால் அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதை இயக்குநர் வெற்றிமாறன் தற்போது தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பைச் சுட்டிக்காட்டி, தனக்கும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “2011 ஆகஸ்ட்ல ஆடுகளம் படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் ஸ்கிரீன் பண்ணிட்டு இந்தியாவுக்குத் திரும்ப வர்றோம். டெல்லி ஏர்போர்ட் இமிகிரேஷன்ல இருந்தவர் என்கிட்ட இந்தில பேசினார். எனக்கு இந்தி தெரியாதுன்னு ஆங்கிலத்தில் சொன்னேன்.
நான் என் அம்மா பேசுற மொழி தமிழ். அதுதான் என்னோட தாய்மொழி. மத்தவங்களோட பேச எனக்கு ஆங்கிலம் தெரியும்னு சொன்னேன். அவர் ரொம்பக் கோபமாகி, நீங்களாம் இப்படித்தான்… இந்தியாவ சீர்குலைக்கிறது தமிழர்களும், காஷ்மீரிகளும் தான்! தீவிரவாதிங்கன்னு என்னவெல்லாமோ பேசி என்னைத் தனியா நிக்க வெச்சிட்டார்.
நாங்க கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடா போயிட்டு வர்றோம்… இந்த வருஷம் இவர் நேஷனல் அவார்டு வாங்கியிருக்கார்..னெல்லாம் என்னுடன் வந்த தயாரிப்பாளர் கதிரேசனும், ஜி.வி.பிரகாஷும் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை. 45 நிமிஷம் என்னைத் தனியா நிக்கவெச்சிட்டு அப்புறம் வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை அனுப்பினாங்க.
என் தாய்மொழியை நான் பேசுறது எப்படி நாட்டோட ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும்? என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும். நாம வாழணும்னா நம்மோட பண்பாட்டை, அடையாளத்த நாம காப்பாத்தணும். அதுக்காக மற்ற பண்பாட்டுக்கோ, மொழிக்கோ எதிராகச் செயல்படுவது நம்முடைய வேலையோ, நோக்கமோ கிடையாது!” என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.