காதலனுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்!

கள்ளக்குறிச்சியில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஞானம்பெற்றான்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் சிவலட்சுமி (18). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை மகன் சோமசுந்தரம் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததும் சிவலட்சுமியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சிவலட்சுமி தனது காதலன் சோமசுந்தரம் வீட்டிற்கே சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் சோமசுந்தரமோ, திருமணம் செய்ய மறுத்து விட்டார். மேலும் சோமசுந்தரத்தின் தாய் மலர்(42), சிவலட்சுமியை ஆபாசமாக திட்டியதோடு, எனது மகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பேனே தவிர, உன்னை திருமணம் செய்து வைக்கமாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டிற்கு சென்று துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீஸார் சிவலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினார்கள். இதோடு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சிவலட்சுமி தனது காதலனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
அதில், “சோமு உன்னை மனமார காதலிக்கிறேன். சத்தியமா உன்னை மறக்க முடியல, என்னை திருமணம் செய்ய மறுக்கிறாய், என்னை புரிஞ்சிக்க மாட்டியா, என்னை வேண்டாம் என்று சொல்லாதடா, என்னை செத்து போகச் சொல் செய்கிறேன். ஆனால் நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என்று எழுதியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மலரை கைது செய்துள்ள போலீஸார் தலைமறைவான சோமசுந்தரத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.