இறந்த தாயின் உடலுடன் 3 நாட்கள் இருந்த பெண் டாக்டர்

கேரளாவில், இறந்த தாய், மீண்டும் எழுந்து வருவார் என்று, 3 நாட்கள் சடலத்துடன், பெண் டாக்டர் இருந்த சம்பவம் நடந்துள்ளது. டாக்டரே இப்படி செய்த காரியம், அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செர்புழச்சேரியை சேர்ந்தவர் ஓமனா (வயது 72). இவருடைய கணவர் ஸ்ரீதரன் பிள்ளை இறந்து விட்டார். ஓமனா தனது மகள் கவிதாவுடன் (வயது 42) வசித்து வந்தார். கவிதா ஓமியோபதி டாக்டராக இருந்து வருகிறார். இந்த நிலையில் உடல்நலக்கோளாறு காரணமாக தாய் ஓமனா கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து போனார்.
இதுகுறித்து கவிதா தனது உறவினர்களிடம் தெரிவிக்காமல் தாயின் சடலத்துடன் இருந்துள்ளார். அவர் மீண்டும் எழுந்து வருவார் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம். அவ்வளவு பாசத்துடன் இருந்ததால், அறிவு அந்த இடத்தில் வேலை செய்யாமல் ஸ்தம்பித்தது. இந்த நிலையில், அழுகிய சடலத்தில் துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் செர்புழச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சடலத்துடன் இருந்த கவிதாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது தாயார் மீண்டும் எழுந்து வருவார் என்று நம்பி இருந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓமனாவில் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கவிதாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த தாயின் உடலுடன் பெண் டாக்டர் 3 நாட்கள் இருந்த சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.